ஒரே காரணத்தை எத்தனை முறை சொல்லுவீங்க!: குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்கப்படுவதாக அளித்த தகவலின் அடிப்படையில், குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குட்கா பொருட்களை குடோன்களில் கண்டுபிடித்தது தொடர்பாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்கை டெல்லி சிபிஐ காவல்துறை விசாரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து குட்கா விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

இதில் குடோனில் இருந்த மாதவராவ், ஸ்ரீனிவாச ராவ், உமாசங்கர், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட கிட்டத்தட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது.

தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில், முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரிசெய்து தாக்கல் செய்யுமாறு சிபிஐ-யிடம் நீதிமன்றம் திருப்பி ஒப்படைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை சிபிஐ நிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ காவல்துறை தரப்பில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்ற விசாரணைக்கு இன்னும் ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று மீண்டும் அதே காரணத்தை தெரிவித்தது.

ஏற்கனவே கிட்டத்தட்ட 20 வாய்த்தாக்களுக்கு மேல் சிபிஐ வாய்த்தா வாங்கியிருந்த வழக்கில் எந்தவொரு வழக்கும் விசாரணை நடைபெறவில்லை. ஒவ்வொரு முறையும் சிபிஐ வாய்த்தா கேட்பதையே பழக்கமாக வைத்துள்ளது. குறிப்பாக இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை…இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை… என்று சிபிஐ தொடர்ந்து இதே காரணத்தை கூறி வருவதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். மேலும், குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரி விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post ஒரே காரணத்தை எத்தனை முறை சொல்லுவீங்க!: குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: