கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்; மாணவ, மாணவிகள் போராட்டம்

சேலம்: கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் தெரிவித்து, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் கல்லூரியின் முதல்வராக பாலாஜி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், மற்றும் பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்து வந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி கடந்த ஜனவரி மாதம், முதல்வர் பணியில் இருந்து பாலாஜி விடுவிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ விடுப்பில் சென்ற அவருக்கு, பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மெமோ கொடுக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்திய தர்மபுரி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, பாலாஜியை மீண்டும் முதல்வர் பொறுப்பில் அனுமதிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட மெமோ மற்றும் பணியில் மீண்டும் சேர்வது தொடர்பாக பேசுவதற்கு, நேற்று காலை பாலாஜி கல்லூரிக்கு வந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் நுழைவுவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவர்கள் போராட்த்தை கைவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளோ, பெண் ஆசிரியர்களோ புகார் ஏதும் கொடுக்கவில்லை.

இதுகுறித்து கல்லூரியின் பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக பெண் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும், மாணவர்கள், பேராசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் எதையும் தாளாளருக்கு தெரிவிக்கக் கூடாது என தடை விதித்திருந்தார். தற்போது கல்லூரி முதல்வர் மீது பலரும் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் அவரை மீண்டும் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது,’’ என்றனர்.

நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
பாலியல் புகார் தொடர்பாக கல்லூரியின் மாஜி முதல்வர் பாலாஜி கூறுகையில், ‘‘கல்லூரி நிர்வாகம் என்னை கட்டாயப்படுத்தி பதவி விலகல் மற்றும் மருத்துவ விடுப்பு கடிதம் பெற்றனர். மேலும் தலித் பெண்களை வைத்து புகார் அளிப்போம் என வக்கீல் மூலமும் மிரட்டல் விடுத்தனர். நிர்வாகம் செய்யும் அத்துமீறல்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், என் மீது பொய் புகார் அளித்தனர். மாணவிகளுக்கும், இதற்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களை தூண்டிவிட்டுள்ளனர்,’’ என்றார்.

The post கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்; மாணவ, மாணவிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: