காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. அதில், ‘திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். காஞ்சிபுரம் மாநகர திமுக, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், எல்லோருக்கும் எல்லாம் திராவிட நாயகரின் பிறந்தநாள் விழா நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி செல்வம் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்துசெல்வம், சுப்பராயன், நிர்மலா, திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசியதாவது: பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் முதல் மேயரும் பெண்தான் பெண்களுக்கு சதவீதம் சம உரிமை அளிக்கின்ற அரசாக இது செயல்படுகிறது. டெல்லி நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னானது என்று எம்பிகள் கேள்வி கேட்கும்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்யவில்லை என்று நாடாளுமன்றத்தில் ஒரு பொய்யை நிதியமைச்சர் கூறி இருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுபோல வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நமது திமுக வேட்பாளர்கள் எல்லோருமே 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸில் நீங்கள் இடம் பெற வேண்டும். திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கக்கூடிய மற்ற கட்சிகள் டெபாசிட் இழக்கும் வகையில், நீங்கள் வெற்றிபெற வேண்டும். நமது விழா நாயக்கர் தளபதி மு.க.ஸ்டாலின் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அறிவித்திருந்தார். இப்போது 65 சதவீத பெண்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிற திட்டமாக அவர் செயல்படுத்தி இருக்கிறார். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி, கல்லூரி மட்டுமில்ல அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கும் நிதியுதவி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுகுமாரன், அன்பழகன், சுந்தரவரதன், ராமகிருஷ்ணன், சீனிவாசன், சிகாமணி பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், வெங்கடேசன், இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் குமார், பாபு, ஞானசேகரன், சேகர், சத்தியசாய், குமணன், ஏழுமலை, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநகர துணை செயலாளர் ஜெகநாதன் கூறினார்.

The post காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: