ஆபாச வீடியோ சர்ச்சை எதிரொலி!: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. உபேந்திர சிங் ராவத் மக்களவை தேர்தலில் இருந்து விலகல்..!!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. உபேந்திர சிங் ராவத் மக்களவை தேர்தலில் இருந்து விலகியுள்ளார். பாரபங்கி தொகுதி எம்.பி.யான உபேந்திர சிங் ராவத்துக்கு அதே பகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கியது. இதனிடையே, பாராபங்கி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பாஜக எம்.பி. உபேந்திர சிங், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச காணொலி, இணையத்தில் வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் எம்பி டிக்கெட் கிடைத்த மறுநாளே ஆபாச வீடியோ வைரலானது.

ஆனால் ஆபாச காணொலியில் இருப்பது தான் அல்ல என திட்டவட்டமாக மறுத்த உபேந்திர சிங், பாரபங்கியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தமது எதிரிகள் செய்த சூழ்ச்சி என்று குற்றம்சாட்டியிருந்தார். ஆபாச வீடியோவில் தான் இருப்பது போல் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சித்தரித்துள்ளதாக ராவத் குற்றம்சாட்டி இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அப்போதைய எம்.பி. பிரியங்கா சிங் ராவத்துக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்த பாஜக, உபேந்திர சிங் ராவத்தை வேட்பாளராக நிறுத்தியது பேசுபொருளானது.

இந்நிலையில், ஆபாச வீடியோ போலியானது என போலீசில் புகார் அளித்திருந்த உபேந்திர சிங் ராவத், தற்போது மக்களவை தேர்தலில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே மேற்குவங்க பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த போஜ்புரி நடிகர் பவன் சிங், போட்டியிலிருந்து விலகினார். தற்போது மேலும் ஒரு பாஜக வேட்பாளர் விலகியுள்ளார்.

The post ஆபாச வீடியோ சர்ச்சை எதிரொலி!: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. உபேந்திர சிங் ராவத் மக்களவை தேர்தலில் இருந்து விலகல்..!! appeared first on Dinakaran.

Related Stories: