பாகிஸ்தான் பிரதமராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பாக். நாடாளுமன்றத்தில் 201 வாக்குகள் பதிவானதை தொடர்ந்து 2வது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வானார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் இழுபறி நீடித்த நிலையில் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8ம் தேதி பொதுதேர்தல் நடைபெற்றது. பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மொத்தமுள்ள 265 இடங்களில் 133 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களிலும், வௌியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சுயேட்சை உறுப்பினர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால் எந்த கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெறவில்லை.

இழுபறி நீடித்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி ஆட்சியமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃபின் பெயர் பாகிஸ்தான் பிரதமராக பரிந்துரைக்கப்பட்டது.

அவரை எதிர்த்து இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் களமிறக்கப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 336 உறுப்பினர்களில் 201 பேர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இம்ரான் கான் கட்சி வேட்பாளர் 92 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இதையடுத்து ஷெபாஸ் ஷெரீஃப் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய ஷெபாஸ், “ காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் விடுதலைக்காக ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்றும். பயங்கரவாதம் நாட்டில் இருந்து அடியோடு அகற்றப்படும். புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும் ”என்றார்.

இந்நிலையில் இன்று(மார்ச் 04) பாகிஸ்தானில் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பதவி விலகும் ஜனாதிபதி ஆரிப் அல்வி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நாடுகளின் தூதர்களும் கலந்து கொண்டனர்.

The post பாகிஸ்தான் பிரதமராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்! appeared first on Dinakaran.

Related Stories: