தேனி மின் பகிர்மானம் சார்பில் வீடுகளில் சோலார் மின்னமைப்பு செயலாக்க கலந்தாய்வு கூட்டம்

கூடலூர், மார்ச் 3: வீடுகளில் சோலார் மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் கூடலூரில் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தேனி மின் பகிர்மான வட்டம் சார்பாக, பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துரையாடல் கூட்டம் கூடலூர் சீலய சிவன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தலைமை தாங்கினார், செயற்பொறியாளர் சந்திரமோகன், உதவிசெயற்பொறியாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். உதவிபொறியாளர் கொடியரசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், பொதுமக்கள் சூரிய தகடு (சோலார்) பற்றியும், அது ஒருநாளைக்கு எவ்வளவு மின் உற்பத்தி செய்யும் என்பது போன்ற கேள்விகளுக்கு, பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டம் குறித்தும், இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை குறித்தும், சூரிய தகடு பொருத்தியபின் மின் கட்டண சேமிப்பு குறித்தும் பொதுமக்களிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர். இதையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் சிலர் அங்கேயே தங்களது பெயர், மின் இணைப்பு எண், அலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்து முன்பதிவு செய்தனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்கி பசுமையான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் சிறப்பு அம்சங்களாக ஒரு கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் சூரிய தகடுகளுக்கு ரூ.30,000 வரையிலும், இரண்டு கிலோவாட்டுக்கு ரூ.60,000, 3 கிலோ வாட் அதற்கு மேல் உள்ளவைகளுக்கு ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியம் சோலார் திட்டப் பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் மேலும் இத்திட்டத்திற்கு வங்கியின் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படுகிறது, ஒரு கிலோவாட் சூரிய தகடு ஒரு நாளில் நான்கு முதல் ஐந்து யூனிட்டுகள் வரை மின் உற்பத்தி செய்யும் இதனால் நுகர்வோர் செய்யும் முதலீடு குறிய காலத்தில் மின் கட்டணம் சேமிப்பு மூலமாக பெறலாம்’’ என்றனர்.

The post தேனி மின் பகிர்மானம் சார்பில் வீடுகளில் சோலார் மின்னமைப்பு செயலாக்க கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: