பாதியில் நிற்கும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு பணி

சிவகங்கை: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல் எண் பதிவு செய்யும் பணி முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. கடந்த 2015ம் ஆண்டு மார்ச் முதல் வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் மற்றும் உறுதிபடுத்தும் திட்டம் செயல்படுத்தும் பணி நடந்தது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல் எண் மற்றும் இ.மெயில் முகவரி இடம் பெறுவது மற்றும் இரட்டை பதிவுகள் நீக்கம், முகவரி திருத்தம், புகைப்படம் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் செய்யப்பட்டது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடத்தப்பட்டது. சம்பந்தபட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் ஜெராக்ஸை வழங்கி ஆதார் படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.

ஆதார் அட்டை இல்லையெனில், ஆதார் அட்டை எடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள ரசீதின் ஜெராக்ஸ் மற்றும் செல் எண்ணையும் வழங்க வேண்டும் என கூறப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி அளவில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 37சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்தனர். சுமார் ஒன்றரை மாதங்கள் நடந்த இப்பணி மந்தமாக நடந்ததால் தொடர்ந்து தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் 2015, ஆகஸ்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து ஆதார் இணைப்பு பணி முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் சுமார் 50சதவீத வாக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தனர்.

இதையடுத்து இப்பணிகள் முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்தவர்கள் மற்றும் இணைக்காதவர்களுக்கு இடையே ஆவணங்களில் வேறுபாடுகள் இருக்குமா என கோள்வி யெழுந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இப்பணி முழுமையடையாத நிலையிலேயே உள்ளது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். ஆதார் எண் இணைப்பு பாதியில் நிற்பதால் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பதிவு ஆவணங்களில் எவ்வித வேறுபாடும் இருக்காது என்றார்.

The post பாதியில் நிற்கும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு பணி appeared first on Dinakaran.

Related Stories: