தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாக நேற்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாநகராட்சி ராஜாஜி பூங்கா பகுதிகளில் ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் மக்கள் எதிர்ப்பு கூட்டமைப்பினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் அவர்கள் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களின் உருவப்படங்களுடன் வந்திருந்தனர்.
அப்போது கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், ‘பொதுமக்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகளை உண்டாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22ல் நடந்த மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேரும், போலீசாரின் தாக்குதலில் அடிபட்டு 2 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு ஆலையை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவை தற்போது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்த வெற்றியை போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு சமர்ப்பிக்கிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தூத்துக்குடி எம்பி கனிமொழிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தூத்துக்குடியை விட்டு அகற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து நிலத்தை திரும்பப் பெற வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்’ என்றனர்.
The post ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பிக்கு நன்றி appeared first on Dinakaran.