தருமபுரம் மடத்தை ரவுடிகளிடம் இருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி: தருமபுரம் ஆதீனம்

 

மயிலாடுதுறை: தருமபுரம் மடத்தை ரவுடிகளிடம் இருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் உள்ளார். மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி கடந்த 25ம் தேதி ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில் ஆபாச வீடியோவை வெளியிடப் போவதாக தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தருமபுரம் மடத்தை ரவுடிகளிடம் இருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம்.

காவல்துறை, தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.. தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசீர்வாதம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தருமபுரம் மடத்தை ரவுடிகளிடம் இருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி: தருமபுரம் ஆதீனம் appeared first on Dinakaran.

Related Stories: