சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் கையகப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

பெங்களூரு: மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, பொருட்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் பறிமுதல் செய்த அசையும் மற்றும் அசையா சொத்துகள் வழக்கு பட்டியலில் இருந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விடுதலையாகியும், வழக்கில் பறிமுதல் செய்த நகை உள்ளிட்ட ஆபரணங்கள் பெங்களூருவில் உள்ள கருவூலத்தில் இருந்தது. அந்த சொத்துகளில் சேர்க்கப்பட்டுள்ள பட்டு சேலைகள், காலணிகள், வாட்ச், தங்க, வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு அரசு கணக்கில் சேர்க்க வேண்டும் என்று பெங்களூரு தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.
எனது மனுவை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம், சிறப்பு அரசு வக்கீல் நியமனம் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸ் தரப்பில் ஆஜரான அதிகாரிகள், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த சொத்துகளில் சிலவற்றை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் செயலாளர் வி.பாஸ்கரன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தனர்.

அதையேற்று கொண்ட நீதிமன்றம், பெங்களூருவில் அரசு கருவூலத்தில் உள்ள தங்க, வைர ஆபரணங்களை மட்டும் 2024 மார்ச் 5 மற்றும் 6 தேதிகளில் நேரில் வந்து பெற்று செல்லும்படி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.

ஆனால் வழக்கில் சம்மந்தப்பட்டு வி.பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அசையும் சொத்துகள் பறிமுதல் செய்வது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் சொத்துகளை பாஸ்கரிடம் ஒப்படைக்கும்போது, மீண்டும் நீதிமன்றமோ அல்லது நாங்களோ கேட்கும்போது வாபஸ் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசாரிடம் வழங்கியுள்ளதால், தற்போது பாஸ்கரனிடம் உள்ள பொருட்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் கையகப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

பாஸ்கரனிடம் உள்ள பொருட்கள்
பட்டு சேலைகள் 11,344, ஏ.சி.மெஷின் 44, டெலிபோன் இன்டர்காம்-33, சூட்கேஸ்-131, ரிஸ்ட்வாட்ச்-91, வால் கிளாக்ஸ்-27, பேன்-86, சேர்கள்-146, டீபாய்ஸ்-34, டேபில்ஸ்-31, காட்ஸ்-24, டிரசிங் டேபிள்-09, ஹாங்கிங் லைட்ஸ்-81, சோபா செட்ஸ்-20, செருப்புகள்-750, டிரசிங் டேபிள் கண்ணாடி-31, கிரிஸ்டல் கட் கிளாஸ்-215, ஐரன் லாகர்ஸ்-3, சால்வைகள்-250, பிரிட்ஜ்ஸ்-12, டெலிவிஷன் செட்ஸ்-10, வி.சி.ஆர்-8, வீடியோ கேமரா-1, சி.டி.பிளேயர்-4, ஆடியோ டெக்-2, டேப் ரிக்கார்டர்-24, வீடியோ கேசட்ஸ்-1,040 மற்றும் 700 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன.

The post சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் கையகப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: