மக்களவை தேர்தலையொட்டி வங்கிகள், தபால் நிலையம் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு:தேர்தல் ஆணையம் புதிய முயற்சி

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க நாடு முழுவதும் வங்கிகள், தபால் நிலையம் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய முயற்சியை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. பொதுவாக நகர்ப்புறங்களில் படித்த இளைஞர்கள் வாக்களிப்பதில் அக்கறை காட்டுவதில்லை என தேர்தல் ஆணையம் அடிக்கடி கவலை தெரிவித்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தல்களில் நாட்டில் 91 கோடி வாக்காளர்களிடம் 30 கோடி பேர் வாக்களிக்கவில்லை.

இந்நிலையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சியாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் தபால் துறையுடன் தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, வங்கிகள், தபால் நிலையங்களில் குடிமக்களின் தேர்தல் உரிமைகள், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இதில் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள், சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படும். அலுவலக வளாகங்களில் போஸ்டர், ப்ளக்ஸ் போர்டுகள் வைப்பது மட்டுமின்றி, வாக்களிப்பது தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். முன்னதாக, தேர்தல் விழிப்புணர்வு குறித்த பாடங்களை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கல்விப் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்க கல்வி அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செய்தது குறிப்பிடத்தக்கது.

The post மக்களவை தேர்தலையொட்டி வங்கிகள், தபால் நிலையம் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு:தேர்தல் ஆணையம் புதிய முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: