திருமூர்த்தி குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு

 

உடுமலை, பிப்.27: உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திநகர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, மேல்நிலை தொட்டியில் நீரேற்றம் செய்யப்படும் குடிநீர், அங்கிருந்து பகிர்மான குழாய்கள் மூலம் நகர் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் தளி சாலையில் மடத்தூர் பிரிவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் பணியின்போது குழாய் உடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் நகர பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது. பின்னர் குழாய் சீரமைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று மீண்டும் அதேபகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தகவலின்பேரில், குடிநீர் வடிகால்துறையினர் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோடை துவங்கும் நிலையில், அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. சிக்கனமாக குடிநீரை பயன்படுத்தும்படி அரசு நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வீணாவது பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. பருவமழை துவங்க இன்னும் 5 மாதங்கள் உள்ளன. கோடை வெயில் இன்னும் உக்கிரமாகும்போது, அணை நீர்மட்டம் வேகமாக குறையும். எனவே, குடிநீர் குழாய்களை சம்பந்தப்பட்ட துறையினர் உரிய முறையில் பராமரிக்க வேண்டும், நீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமூர்த்தி குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: