மாமல்லபுரம் மாசிமக விழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் கடற்கரையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருளர்கள் பங்கேற்ற மாசிமக விழா வெகு விமரிசையாக நடந்தது. இதில், பங்கேற்பதற்காக மதுராந்தகம் மையூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு – சல்சா தம்பதி தங்களது 3 வயது மகளான செல்வியுடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து தற்காலிக குடில் அமைத்து தங்கினர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடியிருந்த இருளர்கள் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக குழந்தை செல்வி திடீரென காணாமல் போனாள்.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் அங்கு கூடியிருந்த இருளர்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், இருளர் தம்பதி காணாமல் போன தங்கள் குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி மாமல்லபுரம் போலீசில் முறையிட்டனர். பிறகு, கடற்கரையில் இருந்த ரோந்து போலீசார் குழந்தை அணிந்திருந்த உடையின் நிறத்தை வைத்து தீவிரமாக தேடினர்.

பின்னர், குழந்தை செல்வி கடற்கரையில் சிறிது தூரத்தில் வழி தெரியாமல் தனியாக நின்று அழுது கொண்டிருந்தாள். அப்போது போலீசார் குழந்தையை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உணவு, தண்ணீர் கொடுத்தனர். இதையடுத்து, குழந்தையின் பெற்றோரை நேற்று நேரில் அழைத்து குழந்தையை ஒப்படைத்தனர்.

The post மாமல்லபுரம் மாசிமக விழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: