அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள்?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக, பாஜ கூட்டணி உடைந்துள்ளதால், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசை, சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசினார். அப்போது 9 மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் வேண்டும் என்று ராமதாஸ் கூறியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன்னர் ராமதாசை, சி.வி.சண்முகம் மீண்டும் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது 9 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி, தேர்தல் செலவுக்கு கூடுதலாக 30 ஸ்வீட் பாக்ஸ் வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதிமுக தரப்பில் 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை மற்றும் 70 ஸ்வீட் பாக்ஸ் தர ஒப்புக் கொண்டதாக சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதனால் மீண்டும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர் , கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம் மற்றும் ஆரணி ஆகிய தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என பாமகவிற்கு அதிமுக நிபந்தனை விதித்துள்ளது. மாநிலங்களவை சீட் ஒன்றும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக நிபந்தனை வைத்துள்ளதாகவும், நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் கூட்டணியில் இணைய பாமக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள்?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: