ரூ.1 கோடி வருமானம் ஈட்டினால் 10% வரி இந்து கோயில்கள் சட்டத்திருத்த மசோதா மேலவையில் தோல்வி: கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவு

பெங்களூரு: காங்கிரஸ் அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்து கோயில்கள் சட்டத்திருத்த மசோதா சட்ட மேலவையில் தோல்வியடைந்தது. இது முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கர்நாடகாவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருவாய் ஈட்டும் கோயில்களிடமிருந்து 5 சதவீத வரியும், ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் கோயில்களிடமிருந்து 10 சதவீத வரியும் வசூலிக்கும் வகையில், கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை நன்கொடைகள் சட்டத்திருத்த மசோதா 2024 காங்கிரஸ் அரசால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மேலவையில் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பாஜ அரசு கொண்டுவந்த சட்டத்திருத்த மசோதா தான் இது என்பதை தெளிவுபடுத்தியதுடன், கோயில் கமிட்டி தலைவர் நியமனத்தில் அரசு தலையிடாது என்று உறுதியளித்து இந்த மசோதாவிற்கு மேலவை உறுப்பினர்களின் ஆதரவை கோரினார். இதையடுத்து, இந்து கோயில்கள் சட்டத்திருத்த மசோதாவிற்கு, மேலவை துணைத்தலைவர் பிரனேஷ், வாக்கெடுப்பு நடத்தினார். மேலவையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜ – மஜத உறுப்பினர்கள் இணைந்து அந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 7 பேரும், எதிராக 18 பேரும் வாக்களித்ததால், மேலவையில் இந்து கோயில்கள் சட்டத்திருத்த மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து பாஜ உறுப்பினர்கள் ஜெய் ராம் என முழங்க, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெய் பீம் என முழங்கினர். இந்து கோயில்கள் சட்டத்திருத்த மசோதா தோல்வியடைந்தது, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் பின்னடைவு ஆகும்.

The post ரூ.1 கோடி வருமானம் ஈட்டினால் 10% வரி இந்து கோயில்கள் சட்டத்திருத்த மசோதா மேலவையில் தோல்வி: கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவு appeared first on Dinakaran.

Related Stories: