ரெய்டுக்கு பின் வசூலான நன்கொடை பற்றி வெள்ளை அறிக்கை வௌியிட பாஜவுக்கு காங்கிரஸ் சவால்

புதுடெல்லி: மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டி பறிக்கப்பட்ட பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வௌியிட பாஜ தயாரா? என காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. ஒன்றிய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் 30 தனியார் தொழில் நிறுவனங்களை மிரட்டி பாஜ நன்கொடை பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் பிரபல ஆங்கில செய்தி இணையதளங்களில் செய்திகள் வௌியாகின. அதில், “2028-19, 2022-23 நிதியாண்டு வரை பாஜவுக்கு நன்கொடை வழங்கிய 30 நிறுவனங்களில் ஒன்றிய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தி உள்ளன.

சோதனை நடத்தப்பட்ட அதேகால கட்டத்தில் பாஜவுக்கு அந்த 30 நிறுவனங்களிடம் இருந்து பாஜவுக்கு ரூ.335 கோடி தேர்தல் நிதி தரப்பட்டுள்ளது. இந்த 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள் சோதனைக்கு முன் பாஜவுக்கு தேர்தல் நிதி அளித்தது இல்லை” என்று வௌியான தகவல் மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜவின் தேர்தல் நிதி வசூலிக்கும் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுவதாக உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “புலனாய்வு அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்து தேர்தல் நிதி என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் பாஜவின் செயல்களுக்கு நல்ல உதாரணம். விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் சிக்கிய நிறுவனங்கள் ஆளும் கட்சியான பாஜவுக்கு ஏன் தேர்தல் நிதி தர வேண்டும்?. பாஜவிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால், பாஜவின் கஜானா நிரம்ப வழி செய்த சோதனைகளின் காலவரிசை பற்றி புள்ளிக்கு புள்ளி மறுப்பு தெரிவிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஒன்றிய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கும் செயலை பாஜ செய்து வருகிறது. கட்சியின் நிதி ஆதாரங்கள் குறித்து பாஜ வௌ்ளை அறிக்கை வௌியிட தயாரா? பாஜவின் சந்தேகத்துக்குரிய தேர்தல் நிதி வசூல் குறித்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

The post ரெய்டுக்கு பின் வசூலான நன்கொடை பற்றி வெள்ளை அறிக்கை வௌியிட பாஜவுக்கு காங்கிரஸ் சவால் appeared first on Dinakaran.

Related Stories: