குதிரையேற்ற போட்டி, பயிற்சி பள்ளி அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை, பிப். 21: சென்னை காவல் குதிரையேற்ற போட்டியை துவக்கி வைத்து, குதிரையேற்ற பயிற்சி பள்ளியை நேற்று விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பின் தொடர்ச்சியாக, இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை காவல்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து “முதலாவது சென்னை காவல் குதிரையேற்ற போட்டி நேற்று முதல் 22ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை, புதுப்பேட்டையில் நடத்துகிறது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுப்பேட்டை, சென்னை காவல் குதிரைப்படை வளாகத்தில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் முன்னிலையில் முதலாவது சென்னை காவல் குதிரையேற்ற போட்டி-24ஐ துவக்கி வைத்து, ‘‘குதிரையேற்ற பயிற்சி பள்ளியை திறந்து வைத்தார். இந்த குதிரையேற்ற போட்டியில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும், காவல் துறை அணிகள் மற்றும் பொதுமக்கள் அணிகள் என 46 குதிரைகளுடன் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியில் 4 கோப்பை வழங்கப்பட உள்ளது.

இத்துடன் இப்போட்டியின் ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் (தங்கப்பதக்கம்), இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் (வெள்ளிப்பதக்கம்) மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் (வெண்கலப்பதக்கம்) ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது. நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்ற குதிரைகள் மற்றும் குதிரையேற்ற வீரர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஓய்வுபெற்ற காவல் உயரதிகாரிகள், சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள், காவல் அதிகாரிகள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post குதிரையேற்ற போட்டி, பயிற்சி பள்ளி அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: