400 இடங்களில் பாஜ வெல்லுமா? வாக்குப்பதிவு இயந்திரம் மீது துரை வைகோ சந்தேகம்

நெல்லையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் சமூக நீதி, சமத்துவத்தை நிலை நாட்ட மாபெரும் தமிழ்க்கனவு என்ற சிறந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். ஒன்றிய அரசு மழை, வெள்ள பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்காமல் இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. ஆனால் மாநில அரசு பங்காக பணிகளை விரைந்து முடிக்க ரூ.12 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. பணிகளும் விரைந்து நடந்து வருகிறது. மதம், ஜாதியை வைத்தும், ராமர் கோயிலை வைத்தும் பாஜ அரசியல் தமிழகத்தில் பலிக்காது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இது வெளிப்படும். நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பா..ஜ. ஒரு போலியான கருத்தை மக்கள் மத்தியில் பாஜ பதிவு செய்கிறது. 400 இடங்களை வெல்வோம் என்று கூறுவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* எந்த சின்னத்தில் போட்டி?

துரை வைகோ கூறுகையில், ‘விருதுநகர், திருச்சி, சென்னை, ஈரோடு போன்ற தொகுதிகளை மதிமுக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தொகுதி எண்ணிக்கை முதலில் முடிவாகட்டும், அதன்பின்னர் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என தலைமை முடிவு செய்யும். ஒவ்வொரு கட்சிக்கும் தனி சின்னம் உள்ளது. அந்த சின்னத்தில் போட்டியிட விரும்புவது வழக்கம்தான். கடந்த காலத்தில் பம்பரம் சின்னத்தை இழந்து விட்டோம். தற்போது பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து கூட்டணி தலைமையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post 400 இடங்களில் பாஜ வெல்லுமா? வாக்குப்பதிவு இயந்திரம் மீது துரை வைகோ சந்தேகம் appeared first on Dinakaran.

Related Stories: