அமேதி, ரேபரேலி மக்களிடம் பகையை விதைக்கும் பாஜக: காங்கிரஸ் தேசிய தலைவர் காட்டம்

அமேதி: ரேபரேலி மற்றும் அமேதி மக்களிடையே பகையை விதைக்கும் வகையில் பாஜக சதி செய்து வருவதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் நடந்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பேசுகையில், ‘அமேதி தொகுதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கடுமையாக உழைத்த பூமி. அமேதி மக்களுக்கும், ‘காந்தி’ குடும்பத்துக்கும் ஆழமான உறவு உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அமேதி ெதாகுதியில் கோடிக்கணக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நிலுவையிலும், நிறைவேற்றப்படாமலும் உள்ளன. அமேதி, ரேபரேலி தொகுதிகளை புறக்கணித்துவிட்டனர். ரேபரேலி, அமேதி மக்களிடையே பகையை விதைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. பாஜக தலைவர்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் 100 இடங்களை கூட தாண்ட முடியாது.

அவர்களின் ஆட்சி அகற்றப்படும்’ என்று கூறினார். முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய ரேபரேலி மக்களவை எம்பியுமான சோனியா காந்தி, கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதேபோல் 2004 – 2019 வரை அமேதி தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, தற்போது வயநாடு எம்பியாக உள்ளார். எனவே காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியும், ரேபரேலி தொகுதியும் வரும் தேர்தலில் என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இரு தொகுதிகளிலும் போட்டியிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

The post அமேதி, ரேபரேலி மக்களிடம் பகையை விதைக்கும் பாஜக: காங்கிரஸ் தேசிய தலைவர் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: