ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 45 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம், பிப். 18: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 45 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு, நெல்லுக்கு உரிய விலை வழங்குவதாக கூறி, அதை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்தும், விவசாயம் செய்யும் முதியவர்களுக்கு மாதம் ரூ.6000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாமல் இருப்பதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதற்காக கிழக்கு பாண்டி ரோட்டில் இருந்து சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் குமார் தலைமையில் விவசாயிகள் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். மாநில செயலர் அய்யனார் மற்றும் நிர்வாகிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ரயில் நிலையப் பகுதிக்கு விவசாயிகள் வந்த போது அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் தாங்கள் ரயில் நிலையத்துக்குள் சென்று சிறிது நேரம் மறியல் செய்து விட்டு செல்வதாகக் கூறினர். ஆனால் போலீசார் அவர்களை அனுப்ப மறுத்தனர். இதையடுத்து போலீசார் விவசாயிகளை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து 5 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 45 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு: விழுப்புரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: