மேகதாது அணையை கட்டியே தீருவோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

கர்நாடகா: காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபையில் 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை முதல்வர் சித்தராமையா நேற்று தாக்கல் செய்தார். அப்போது, ரூ.29 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்த அவர் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கும், காங்கிரஸ் அரசின் தேர்தல் இலவச வாக்குறுதி திட்டங்களுக்கு தாரளமாக நிதி ஒதுக்கீடு செய்தார்.

பின்னர், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சபையில் திட்டவட்டமாக அறிவித்தார். பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்: தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பள்ளிகள், விடுதிகள் கட்ட ரூ.2,710 கோடி நிதி ஒதுக்கீடு.
2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மாநிலத்தின் 147 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய சாலைகள் ரூ.1,700 கோடி செலவில் சீரமைத்து மேம்படுத்தப்படும். மாநிலத்தின் தாலுக்காக்களில் 100 படுக்கைகளுடன் மருத்துவமனை கட்டப்படும். ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை உள்பட மாநிலத்தில் அனைத்து நீர்வள திட்டங்களும் விரைந்து அமல்படுத்தப்படும்’ என்றார்.

* பாஜ-மஜத வெளிநடப்பு
கர்நாடக சட்டசபையில் 15வது நிதிநிலை அறிக்கையை முதல்வர் சித்தராமையா வாசித்து முடித்த பிறகு, பட்ஜெட் அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் என்று புதியதாக எதுவும் இல்லை. இது ஒரு வெற்று அறிக்கை என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளான பாஜ மற்றும் மஜத உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

The post மேகதாது அணையை கட்டியே தீருவோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: