1,622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர சான்றிதழ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

 

சென்னை: ஆய்வக நுட்புநர்களுக்கான தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 1,622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் (என்.ஏ.பி.எல்) சான்றிதழ் வழங்கினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 159 உள்ளது. சென்னை நீங்கலாக தமிழ்நாட்டில் உள்ள 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றிய அரசின் தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் 1,622 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு கிடைத்துள்ளது.

கடந்த 5ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தொல்லவிளை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி ஆய்வகம் என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி 34 வகை ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவற்றையெல்லாம் பாராட்டி ஒன்றிய அரசு என்.ஏ.பி.எல் சான்றிதழ் தந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னால் 1,021 புதிய மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 20 சுகாதார மாவட்டங்களில் விரும்பும் இடத்தில் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். மேலும் கடந்த வாரம் எம்.ஆர்.பி மூலம் 977 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது. 332 ஆய்வக நுட்புநர்களுக்கான தேர்வு முடிவடைந்துள்ளது, நாளையுடன் (இன்று) சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடியும். அடுத்த 2 நாட்களுக்குள் அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அடுத்த வாரம் பணி ஆஇவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், அரவிந்த் ரமேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post 1,622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர சான்றிதழ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: