மீண்டும் மஞ்சப்பை பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஆண்டிபட்டி, பிப். 16: தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்கள் தடை செய்யப்பட்டது. இத்தடை செய்யப்பட்ட பொருட்களுக்கான மாற்றாக பாரம்பரியமான மஞ்சப்பைகளின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களின் தீமை மற்றும் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் மாதந்தோறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் உத்தமபாளையம் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, பண்ணைப்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அருகே வைகை அணை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் டி.சுப்புலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமை, அவற்றை தவிர்ப்பதற்கான மாற்று வழிகள் குறித்தும்,

மீண்டும் மஞ்சப்பை இயக்கம் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடித்தல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. அனைவருக்கும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விசுவநாதன் உதவிபொறியாளர்கள் காயத்ரி, சித்ராதேவி ஆகியோர் இருந்தனர்.

The post மீண்டும் மஞ்சப்பை பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: