தேனூர் அரசு பள்ளியில் இயற்கை முறையில் மாணவர்கள் விளைவித்த காய்கறி, கீரைகள்

 

பாடாலூர், பிப். 16: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் அரசு வழிகாட்டுதல்படி இயற்கை முறையில் மாணவ, மாணவிகள் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்தனர். அதில் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், அவரைக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், சுரக்காய், புடலங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், நாட்டுத்தக்காளி, மிளகாய் மற்றும் கீரை வகைகளான கொத்தமல்லி, அரக்கீரை, பொன்னாங்கண்ணி, வல்லாரை கீரை ஆகியவற்றை விளைவித்து வருகின்றனர். மேலும் பள்ளியின் மதிய உணவு திட்டத்திற்கு பள்ளி தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை வழங்கி உதவுகின்றனர்.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: எங்கள் மாணவ, மாணவிகள் கல்வியோடு சேர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் மூலிகைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தனர். தலைமையாசிரியர் மணி, மிஷன் இயற்கை ஒருங்கிணைப்பாளர் சித்ரா மற்றும் சக ஆசிரியர்கள் அவர்களை ஊக்கப்படுத்தினோம். அதன்படி எங்கள் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் உழைப்பிலும், அர்ப்பணிப்பிலும் விளைந்த காய்கறிகளை காணும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றனர். சுயசார்பு, தன்னம்பிக்கை, இயற்கை காத்தல் போன்ற செயல்திறனை வளர்த்துக் கொள்ளும் தேனூர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

The post தேனூர் அரசு பள்ளியில் இயற்கை முறையில் மாணவர்கள் விளைவித்த காய்கறி, கீரைகள் appeared first on Dinakaran.

Related Stories: