தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் முதல் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் அமல்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் தற்போது 4,820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மது வாங்குவோரிடம் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெற்று செல்கின்றனர். இதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்தது.

நீலகிரியை தொடர்ந்து ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலை மாவட்டங்களிலும், பின்னர் கோவை, பெரம்பலூர், தர்மபுரியிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான டெண்டரை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தவிர தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மதுபாட்டில்களை திருபப்பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் பாட்டில்களை சேமிக்க போதுமான இடமில்லை என பணியாளர்கள் தெரிவித்தனர். தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. அனைத்து மதுக்கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக பாட்டில் திரும்ப பெறப்படும். டெண்டர் 28ம் தேதி இறுதி செய்யப்பட்டு காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்படும். ஏப்ரல் முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக் கடைகளிலும் அமல்படுத்தப்படும் என்றனர்.

The post தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் முதல் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் அமல்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: