கட்சி, சின்னம் விவகாரம் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத் பவார் மனு: விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் கட்சி, சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத் பவார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த சரத் பவாருக்கும், அவரது அண்ணன் மகனான அஜீத் பவாருக்கும் பாஜ கூட்டணியில் இணைவது தொடர்பாக கடந்தாண்டு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அஜீத்பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிரா ஆட்சியில் உள்ள சிவசேனைபாஜ கூட்டணியில் இணைந்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர், தேசியவாத காங்கிரசை சேர்ந்த பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது. அதனால் அக்கட்சியையும், சின்னத்தையும் தனக்கே வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். இந்த விவகாரத்தை விசாரித்த தேர்தல் ஆணையம், கட்சி ரீதியாகவும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் அஜீத் பவார் அணிக்கே பெரும்பான்மை உள்ளதாக கூறி, அவர் தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று கடந்த 6ம் தேதி அறிவித்தது. மேலும் அக்கட்சியின் ‘கடிகாரம்’ சின்னத்தையும் அஜீத் பவார் அணிக்கு வழங்கியது. அதே நேரத்தில், சரத் பவாரின் கட்சி, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் என்ற பெயரில் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் புனேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சரத் பவார் பேசுகையில், ‘கட்சி மற்றும் சின்னத்தை அதன் நிறுவனர் கைககளில் இருந்து பறித்து, மற்றவர்களுக்கு வழங்கிய தேர்தல் கமிஷனின் முடிவு ஆச்சர்யம் அளிக்கிறது. இதுபோன்ற நிலை நாட்டில் ஒருபோதும் நடந்ததில்லை. இந்த முடிவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். சின்னத்தை விட, எண்ணங்களும், சித்தாந்தமும் தான் முக்கியம்’ என்றார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிா்த்து சரத் பவார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அபிஷேக் ஜெபராஜ் மூலம் தனிப்பட்ட முறையில் இந்த மனுவை சரத் பவார் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கட்சிக்கு உரிமை கோரி சரத் பவார் அணி தரப்பில் மனு தாக்கல் செய்தால், தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் முடிவு எடுக்க கூடாது என கூறி அஜீத் பவார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கட்சி, சின்னம் விவகாரம் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத் பவார் மனு: விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: