ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துவதாகும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டம்

சென்னை: சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கேரள ஆளுநர் கூட இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால், நம்முடைய தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையிலிருந்து ஒரு வார்த்தைகூட பேசாமல் சில சொந்த கருத்துகளை பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். மேலும், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றார். ஆனால், மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.

இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய பேரவை தலைவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆளுநரின் இந்த செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துவதாகும். தமிழ்நாடு அனைத்து விதத்திலும் முதலிடத்தில் இருப்பதை புள்ளிவிவரங்களோடு சொல்லுகின்றபோது, அதை ஏற்கிற மனப்பக்குவமும், அதனைத் தாங்கி கொள்கிற சக்தியும் ஆளுநருக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

தேசிய கீதத்தை வாசிக்க வேண்டுமென்று சொல்கின்ற ஆளுநர் இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம். ஆளுநர்கள் எல்லாம் ரிமோட்கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எங்கள் ஆட்சியில் இதுபோல செயல்கள் நடைபெறவில்லை என கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா என்று பல இடங்களில் இடம்பெற்றது, அதை எல்லாம் ஆளுநர்கள் வாசித்தனர். ஆனால் இந்த ஆளுநர் உரையை படித்து பாருங்கள், இந்த அரசு என்று தான் இருக்கும், இரண்டு மூன்று இடங்களில் மட்டும் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் என பெயரே இருக்கும்.

அந்த அளவிற்கு எளிமையாக, விளம்பரம் இல்லாமல் நாங்கள் செய்கின்ற சாதனைகள் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையோடு, சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த உரையை வாசிக்க ஆளுநருக்கு மனமில்லை. சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்தும் ஆளுநர் பற்றியும் எதிர்க்கட்சி தலைவர் ஏதாவது விமர்சனம் செய்தாரா? இல்லை. ஒருவேளை ஆளுநரை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தால், அடுத்தநாள் ரெய்டு வரும்.

உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் நாங்கள் சமரசமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியபடி, முதல்வர் ஆளுநரை சந்தித்து பேசினார். சுமுகமான உறவு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மீண்டும் ஆளுநர் மோதல் போக்கையே கடைபிடிக்கின்றார். தமிழகத்தில் அமைதி நிலவுகின்றது, மதநல்லிணக்கம் நிலவுவதால் தான் வெளிநாட்டு தொழில் முனைவோர்கள் முதலீடு செய்ய ஏற்ற இடமாக தமிழகத்தை தேர்வு செய்கின்றனர் என்றார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துவதாகும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: