ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்: காங். சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி!

சென்னை: ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே இருந்திருக்கலாம் என காங். சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். இதை தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்து முடித்தார். இந்நிலையில் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறி அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே பேரவையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், காங். சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியில் கூறியதாவது; ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே இருந்திருக்கலாம். தமிழக சட்டப்பேரவையில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுதான், பின்பற்றப்பட்டுள்ளது. ஆளுநர் மரபுகளை மீறியபோதும் ஜனநாயகப்படி செயல்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். 2 நிமிடம் காத்திருந்து தேசிய கீதம் பாடிய பிறகு ஆளுநர் சென்றிருக்கலாம். ஒன்றிய அரசுக்கு எதிரான மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் குறிவைத்து அவமரியாதை செய்கின்றனர்.

மரியாதையை ஆளுநர் காப்பாற்றிக் கொள்ளவில்லை. உரைக்கு முதலில் ஒப்புதல் தந்த பிறகு சட்டப்பேரவையில் வாசிக்க மாட்டேன் என்று ஆளுநர் நாடகம் ஆடியுள்ளார். ஆளுநர் ரவியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமானது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஷமத்தனம் செய்து சட்டமன்ற மாண்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சிதைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

 

The post ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்: காங். சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி! appeared first on Dinakaran.

Related Stories: