சேலத்தில் 2வது திருமணம்; இளம்பெண்ணை துன்புறுத்திய அமெரிக்க இன்ஜினியர் கைது: வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

சேலம்: சேலத்தில் 2வது மனைவியான இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.சேலம் திருவாக்கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் ஆர்த்தி (26). இவரது முதல் கணவர் கண்ணன், கடந்த 2021ம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தார். இதனால், ஆர்த்தி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு தனது 2 மகன்களை வளர்த்து வந்துள்ளார். இச்சூழலில் கடந்தாண்டு சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியரான இன்ஜினியர் பாஸ்கர் என்பவரை ஆர்த்தி, 2வது திருமணம் செய்துகொண்டார். அவருக்கும் இது 2வது திருமணம். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு விட்டு பாஸ்கர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நேற்றுமதியம், சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள அவரது தங்கும் விடுதியில் கணவர் பாஸ்கர் இருப்பதை அறிந்து, அங்கு ஆர்த்தி தனது உறவினர்களுடன் வந்துள்ளார். அப்போது, சேலம் டவுன் போலீசில் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாஸ்கர் புகார் கொடுத்தார். இதனால், அவரை மீட்டுச் செல்ல டவுன் போலீசார் வந்தனர்.

தங்கும் விடுதியில் இருந்து பாஸ்கரை மீட்டு போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர். அப்போது, அந்த வாகனத்தின் முன் ஆர்த்தி அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினார். உடனே போலீசார், தர்ணா செய்த ஆர்த்தியை இழுத்து அப்புறப்படுத்திவிட்டு வாகனத்தை அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து ஆர்த்தி, தனது கணவர் பாஸ்கர் மீது டவுன் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘அமெரிக்க வாழ் இந்தியரான பாஸ்கர், தன்னை 2வது திருமணம் செய்யும் போது தன்னையும், குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும், அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.

ஆனால் தற்போது தன்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். 9ம் தேதி இரவு சீலநாயக்கன்பட்டி ரோட்டில் வைத்து, தன்னையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டி, அடித்து துன்புறுத்தி காரில் இருந்து தள்ளிவிட்டு விட்டு பாஸ்கர் சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக்கூறியிருந்தார்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மனைவியை அடித்து துன்புறுத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டிய அமெரிக்க வாழ் இந்தியரான பாஸ்கர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான வழக்கும் பாய்ந்தது. இதைத்தொடர்ந்து நேற்றிரவு அமெரிக்க வாழ் இந்தியர் பாஸ்கரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சேலத்தில் 2வது திருமணம்; இளம்பெண்ணை துன்புறுத்திய அமெரிக்க இன்ஜினியர் கைது: வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: