நான் மேற்குவங்க மாநிலத்தின் ஏக்நாத் ஷிண்டேவா?; என் கழுத்தை அறுத்தாலும் ‘திரிணாமுல் ஜிந்தாபாத்’ என்பேன்!: மம்தாவின் உறவினரான அபிஷேக் ஆவேசம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் ஏக்நாத் ஷிண்டே என்று விமர்சனம் எழுந்ததற்கு, ‘என் கழுத்தை அறுத்தாலும் ‘திரிணாமுல் ஜிந்தாபாத்’ என்பேன்’ என்று மம்தாவின் உறவினரான அபிஷேக் ஆவேசமாக கூறினார். எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மோதல் இருந்து வருகிறது. அதேநேரம் மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜிக்கும், அவரது உறவினரான அமைச்சர் அபிஷேக் பானர்ஜிக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

அபிஷேக் பானர்ஜி மேற்குவங்க மாநிலத்தின் ‘ஏக்நாத் ஷிண்டே’ அல்லது ‘அஜித் பவார்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக இடதுசாரி, காங்கிரஸ் தலைவர்கள் அந்த விமர்சனங்களை முன்னெடுத்துள்ளனர். அதாவது மம்தா பானர்ஜியை வெளியேற்றுவார் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அவர் உடைப்பார் என்றும், பாஜகவுடன் சேர்ந்து முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அபிஷேக் பானர்ஜி அளித்த பேட்டியில், ‘எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையோ, லட்சியமோ இல்லை. ‘இந்தியா’ மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், நான் ஒன்றிய அமைச்சராக மாட்டேன். காரணம், ஒன்றிய அரசு நிர்வாகத்திற்கு செல்ல விருப்பம் இல்லை. திரிணாமுல் கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். என்னை மேற்குவங்கத்தின் ஏக்நாத் ஷிண்டே என்றும், அஜித் பவார் என்றும் சிலர் வதந்தி பரப்புகின்றனர். இதுபோன்ற கருத்துகளை கூறும் நபர்கள், முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்.

எனது கழுத்தை அறுத்தாலும், நான் திரிணாமுல் காங்கிரஸ் ஜிந்தாபாத், மம்தா பானர்ஜி ஜிந்தாபாத், ஜெய் வங்காளம் என்ற குரல்கள் தான் வெளியே வரும். எனவே பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன். என்னை கைது செய்தாலும், எத்தனை நாட்கள் உள்ளே வைத்திருப்பீர்கள். ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள்! அதற்கு பிறகு? பின்னர் நான் வெளியே வந்துவிடுவேன்’ என்று கூறினர்.

The post நான் மேற்குவங்க மாநிலத்தின் ஏக்நாத் ஷிண்டேவா?; என் கழுத்தை அறுத்தாலும் ‘திரிணாமுல் ஜிந்தாபாத்’ என்பேன்!: மம்தாவின் உறவினரான அபிஷேக் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: