ஜோதிடரை பார்க்க அடிக்கடி ஹெலிகாப்டரில் ஜாலி பயணம்: மறைந்த முதல்வர் தருண் கோகாய் மீது பா.ஜ குற்றச்சாட்டு

கவுகாத்தி: அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி தொடங்கிய மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் 6ம் தேதி நடைபெற்ற விவாதத்தில் பேசிய மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தாஸ், “2021 மே 10 முதல் 2024 ஜனவரி 30 வரை முதல்வர் ஹிமந்த பிஸ்வா, பிற அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் விமான பயணத்துக்காக ரூ.58,23,07,104 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இதுகுறித்து நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த 9ம் தேதி பேசிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் “3 ஆண்டுகளில் அசாம் முதல்வர் ஹிமந்தாவின் விமான பயண செலவு ரூ.58.23 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அரசு பணத்தை அசாமின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம். ஹிமந்தாவின் விமான பயண செலவு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும்” என ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுகுறித்து காங்கிரசில் இருந்து பாஜவுக்கு சென்ற முன்னாள் எம்.எல்.ஏவும், அசாம் அமைச்சருமான பிஜூஷ் ஹசாரிகா தன் டிவிட்டர் பதிவில், “அசாம் முன்னாள் முதல்வர் மறைந்த தருண் கோகோய் தன் குடும்ப ஜோதிடரை பார்ப்பதற்காக கவுகாத்தியில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள ஜாகிரோட், நல்பாரிக்கு அரசு பணத்தில் பலமுறை ஹெலிகாப்டரில் பயணம் செய்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அந்த பணத்தை காங்கிரஸ் இதுவரை செலுத்தவே இல்லை. முதல்வர் ஹிமந்தாவின் விமான செலவு பற்றி கவுரவ் கோகோய் அடுத்தமுறை கேள்வி எழுப்பும்போது தருண் கோகோயின் விமான பயண செலவு பற்றியும் பேச வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

The post ஜோதிடரை பார்க்க அடிக்கடி ஹெலிகாப்டரில் ஜாலி பயணம்: மறைந்த முதல்வர் தருண் கோகாய் மீது பா.ஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: