‘‘பொருநை’’ புத்தக திருவிழாவில் வினாடி வினா, சிறுகதை போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டிய மாணவர்கள்

*மினி சுற்றுலாதலமாக மாறியது வர்த்தக மையம்

நெல்லை : நெல்லை மாவட்ட நிர்வாகம், தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி) இணைந்து நடத்தும் 7வது பொருநை புத்தக திருவிழா நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை இந்த புத்தக கண்காட்சி நடக்கிறது. புத்தக கண்காட்சியில் 120 அரங்குகள் இடம்பெற்று உள்ளன. அறிவியல், அரசியல், ஆன்மீகம், ஜோதிடம், வரலாறு, கணினி அறிவியல், கலை, இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இக்கண்காட்சியில் நிரம்பி வழிகின்றன. புத்தகங்களை தேடி கண்டுபிடித்து, அதிகளவு வாங்கி செல்வதற்கு எப்ேபாதுமே மாலையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் பகல் வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

மாணவ, மாணவிகளின் புத்தக ஆர்வத்தை தூண்டும் வகையில் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகளை தினமும் பஸ் அல்லது வேனில் மொத்தமாக அழைத்து வருவதால், புத்தக திருவிழா நடக்கும் வர்த்தக மையத்தில் சீருடை அணிந்த மாணவ, மாணவிகள் கூட்டம் பகல் பொழுதில் அலைமோதுகிறது. மாணவ, மாணவிகள் தங்கள் கொண்டு வந்திருக்கும் பணத்திற்கு ஏற்ப, சிறு, சிறு புத்தகங்களை வாங்குவதோடு, அங்கு நடக்கும் அறிவு திறன் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். புத்தக திருவிழாவின் மற்றொரு அரங்கில் காணப்படும் பழங்கால பொருட்கள் கண்காட்சி, அணுஉலை மாதிரிகள், சுயஉதவிக்குழு பொருட்கள் ஆகியவற்றையும் ஆர்வத்தோடு பார்வையிட்டு செல்கின்றனர்.

நேற்று புத்தக திருவிழா அரங்கில் வேளாண் கண்காட்சியும் நடந்ததால், அங்கு விவசாயிகளும் ஏராளமானோர் திரண்டனர். இதனால் வர்த்தக மையம் மினி சுற்றுலா தலமாக மாறியது. மாணவ, மாணவிகள், கல்வியாளர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், விவசாயிகள், வேளாண் பொருள் விற்பனையாளர்கள் என பல்வேறு தரப்பினர் அங்கு திரண்டனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று காலையில் புத்தக திருவிழாவில் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் வினாடி – வினா போட்டி நடந்தது.

இதில் பள்ளி மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராக நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி, ஆசிரியர்கள் கணபதி சுப்பிரமணியன், செல்வராஜ், சுப்புலட்சுமி, சொக்கலிங்கம் ஆகியோர் செயல்பட்டனர். முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், சமூக செயற்பாட்டாளர் சபேசன் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

கல்லூரி மாணவ, மாணவியருக்கு நேற்று சிறுகதை போட்டி நடந்தது. தூய சவேரியார் கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் இதய ராஜா தலைமையில், பேராசிரியர் அந்தோணி சகாய சோபியா, சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியர் செல்வஸ்ரீ, அன்னை ஹாஜிரா கல்லூரி பேரா. சாப்ரின், முன்னாள் மாணவி கார்த்திகா ஆகியோர் நடுவராக செயல்பட்டனர். முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

புத்தக திருவிழாவில் நேற்று காலை 10 மணி அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பழங்குடியினர் ஓவியமாகிய வார்லி ஓவியம் வரைதல் பயிற்சி நடந்தது. இப்பயிற்சியை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி துவக்கி வைத்தார். ஓவியஆசிரியர் ஈஸ்வரன் பயிற்சியை நடத்தினார். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சிக்கு தேவையான பொருள்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

38 மொழிகளில் திருக்குரான்

அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் மேலப்பாளையம் கிளை சார்பில் புத்தக கண்காட்சியில் இஸ்லாத்தின் வேதமாகிய திருக்குரானை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் 38 மொழிகளில் திருக்குரான் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஜமாஅத் சார்பில் மொத்தம் 76 மொழிகளில் திருக்குரான் மொழி பெயர்க்கப்பட்டுள்ள சூழலில், நெல்லை புத்தக திருவிழாவில் 38 மொழிகளில் குரான் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன. உலக அமைதி, மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மேலோங்க செய்யும் வகையில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு உள்ளதாக அரங்க அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

சிறை கைதிகளுக்கு புத்தக தானம்

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் கைதிகளிடம் புத்தக வாசிப்பை உருவாக்கவும், அவர்களை படைப்பாளிகளாக மாற்றவும் சிறைகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகங்களுக்கு பொதுமக்கள், படைப்பாளிகளிடம் இருந்து நூல்களை தானமாக பெறப்பட்டு வருகிறது. இதேபோல் பொருநை புத்தகக் கண்காட்சியிலும் புத்தகங்கள் தானமாக பெற கூண்டுக்குள் வானம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் தானப்பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்காக சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் ஏற்பாட்டில் உதவி சிறை அலுவலர் ஜானகிராமன் பொறுப்பில் எண் 101ல் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கில் உள்ள முதுநிலை காவலர் மரகதவல்லி, சிறை ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் சிறைவாசிகளுக்கு நூல்களை தானம் பெற்று வருகின்றனர். இங்கு பொதிகை தமிழ்ச் சங்கம் சார்பில் ரூ.2000 மதிப்புள்ள புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post ‘‘பொருநை’’ புத்தக திருவிழாவில் வினாடி வினா, சிறுகதை போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டிய மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: