கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழாவில் தடுப்புகளை உடைத்து சீறிப்பாய்ந்த காளைகள்

*10 பேர் காயம்

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அடுத்த சோழமூர் ஊராட்சி இடக்கிருண்ஷாபுரத்தில் நேற்று 57ம் ஆண்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. இவ்விழாவிற்கு தாசில்தார் கலைவாணி தலைமையிலான வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி பழனி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீயணைப்புத்துறையினர், மருத்துவ துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

அரசு அலுவலர்கள் முன்னிலையில் விழா குழுவினர் உறுதிமொழி எடுத்து கொண்டு பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டது. இதில் 5 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இவ்விழாவில் காளைகள் தடுப்புகளை உடைத்து சீறிப்பாய்ந்து அங்கு இருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் புகுந்தது. இதனால் சிதறி ஓடியதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதில் குறிப்பிட்ட இலக்கை வேகமாக கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ₹60 ஆயிரம், 2ம் பரிசாக ₹55 ஆயிரம், 3ம் பரிசாக ₹50 ஆயிரம் உட்பட மொத்தம் 67 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் காயம் அடைந்தனர். ஏற்கனவே கடந்த மாதம் பொங்கல் பண்டிகையின் போது இந்த கிராமத்தில் அனுமதி இன்றி விழா நடந்த நிலையில் தொடர்ந்து 2வது முறையாக அதே கிராமத்தில் மாடு விடும் விழா நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏரியில் விழுந்த காளை

கே.வி.குப்பம் அடுத்த இடக்கிருஷ்ணாபுரத்தில் நடந்த எருது விடும் விழாவில் காளைகள் ஓடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதையின் முடிவில் ஏரி ஒன்று உள்ளது. அதில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளை ஒன்று விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் காளையை மீட்டனர்.

The post கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழாவில் தடுப்புகளை உடைத்து சீறிப்பாய்ந்த காளைகள் appeared first on Dinakaran.

Related Stories: