செங்கல்பட்டில் சாலையை ஆக்கிரமித்து வெள்ளை கோணி குடோன்: காற்றில் பறக்கும் துகள்கள்; நோய்கள் பரவுவதாக பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், காற்றில் பரவும் வெள்ளை கோணி துகள்களால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். செங்கல்பட்டு அடுத்த பச்சையம்மன் கோயில் பகுதியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து, நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த பகுதியில்தான் கொட்டுகிறார்கள். இங்கு குப்பைகள் கொட்டுவதற்கான குடோன் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சேகரித்து வரும் குப்பைகளை குடோன் உள்ளே கொட்டாமல் சாலையிலேயே கொட்டுவதால் சாலையில் மலைபோல குவிந்து காணப்படுகிறது.

இதனால், துர்நாற்றம் வீசுவதோடு மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இதே சாலையில் வெள்ளைக்கோணி குடோனும் இயங்கி வருகிறது. 200 சதுரடி இடத்தை வைத்துக்கொண்டு இந்த சாலை முழுவதையும் ஆக்கிரமித்து சாலைகளின் இருபுறமும் கோணிகளை டன் கணக்கில் மூட்டை மூட்டையாக கொட்டி வைத்துள்ளனர். இந்த கோணியிலிருந்து மைதா மாவு போன்ற துகள்கள் பறந்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட முடியவில்லை. வாகனங்களில் செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர் மற்றும் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு அந்த துகள்கள் காற்றில் பரவுவதால் வீட்டுக்குள் பரவி உணவுகளிலும் படிகிறது.

அதேபோல், மூக்கில் புகுந்து குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சுத்திணறல், இருமல், உடல் அரிப்பு, சொரி, சிரங்கு போன்ற நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து எங்களை மீட்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அந்த கோணி குடோனை அகற்ற வேண்டும். மேலும், கோணிகளை சாலையில் தேக்கி வைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து நகராட்சியில் புகார் மனு அளித்துள்ளனர்.

The post செங்கல்பட்டில் சாலையை ஆக்கிரமித்து வெள்ளை கோணி குடோன்: காற்றில் பறக்கும் துகள்கள்; நோய்கள் பரவுவதாக பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: