விரிவாக்க பணிகளுக்காக நோட்டீஸ் விநியோகம் தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை

*தலைவர் சமரச பேச்சு வார்த்தை

தாராபுரம் : தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் கூடுதல் கடைகள் கட்டுவதற்காக பழைய கடைகளை இடிக்க திட்டமிடப்பட்டு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் மாற்றிடம் வழங்க கோரி பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தாராபுரத்தில் ஆண்டு 42 ஆண்டுக்கு முன் நகரின் தற்போதைய புறவழிச் சாலை அருகே, புதிய நகராட்சி பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு அவற்றில் 53 கடைகள் கட்டப்பட்டது.அவற்றை ஒப்பந்த அடிப்படையில் வியாபாரிகளுக்கு ஒப்படைத்தது. இவர்களில் பலர் ஆரம்ப காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாத வாடகையான ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2500 வரை நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சியின் நிதி நிலையை சீராக்க பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, 65 புதிய கடைகளை கட்டி மாத வாடகைக்கு விட முடிவு செய்தது.அதை தொடர்ந்து ரூ.5.50 கோடியில் பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் வளைவு மற்றும் விரிவுபடுத்தி பட்ட கூடுதலான புதிய கடைகளை கட்ட திட்டமிட்டது.

இதயைடுத்து நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் கடைகளை காலி செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பியது. இதன்படி கடைகளை இடிப்பதற்கு டெண்டர் விடப்பட்டு வரும் 11ம் தேதி பணிகள் துவங்கப்பட உள்ளது.இந்நிலையில் தாராபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட் வடபுறம் வணிக வளாகங்களில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மத்திய பேருந்து நிலைய குத்தகைதாரர்கள் அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோருடன் 40க்கும் மேற்பட்டோர் தாராபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பஸ் ஸ்டாண்ட் கடைகளை கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அரசின் தொழில்வரி, ஜி எஸ் டி ,சொத்து வரி, லைசென்ஸ் கட்டணம் என அனைத்தும் முறையாக செலுத்தி வருகிறோம். இந்நிலையில் நகராட்சி கடைகளை இடித்து புதிதாக கட்ட நகராட்சி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு கடை குத்தகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நகராட்சியின் கூடுதல் வாடகைக்கும், கடைகளை இடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 21 கடைக்காரர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்நிலையில் 53 கடைகளையும் இடித்து புதிதாக கட்டப் போவதாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதனால் சிறு வியாபாரிகளான தங்களுடைய வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்படும் எனவே புதிதாக கட்டப்படும் கடைகளை ஏற்கனவே அங்கு கடை வைத்து தொழில் செய்து வரும் குத்தகைதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். மேலும் புதிய கடைகளில் கட்டுமான பணிகள் முடியும் வரை அப்பகுதியில் கடை வைத்து தொழில் நடத்த மாற்று இடம் ஒதுக்கித் தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வியாபாரிகளிடம் பேசுகையில்:நகராட்சிக்கான வருவாய் மிகவும் பற்றாக்குறையான நிலை இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர்களிடம் பேசி ஒப்புதல் பெற்று, பஸ் ஸ்டாண்டில் 65 புதிய கடைகளை கட்ட ரூ.5.50 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

மேலும் 40 வருடங்களுக்கு மேல் அங்குள்ள கட்டிடங்கள் பழமை ஆகிவிட்டதால், நகராட்சி விதிமுறைகளின் படி அபாய நிலையில் உள்ள அந்த கட்டிடங்களை எடுத்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய கட்டிடம் கட்டுவது தான் நியாயமானது. புதிய கடைகள் கட்டி முடிக்கும் வரை பேருந்து நிலைய வளாகத்திற்குள்ளேயே தற்காலிக கடைகள் அமைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடை நடத்தி வருபவர்களின் கோரிக்கையின் படி புதிதாக கட்டப்படும் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து ஒப்பந்தப்பு புள்ளி வரப்படும். இதில் யார் அதிகம் வாடகை தருவதாக ஒப்புதல் கூறுகிறார்களோ அவர்களுக்கு கடைகளை வழங்க இருக்கிறோம். இதில் ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை சலுகை சட்டப்படி வழங்க இயலாது.

எனவே நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடை வைத்து தொழில் செய்யும் அனைவரும் நகராட்சியின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையின் போது நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் மேலாளர் முருகதாஸ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

The post விரிவாக்க பணிகளுக்காக நோட்டீஸ் விநியோகம் தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: