வரலாற்று அடையாளங்களை சேதப்படுத்த வேண்டாம்: பசுமை நடை நிகழ்வில் தகவல்

 

மதுரை, பிப். 5: பசுமை நடை இயக்கத்தின் சார்பில், தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த இடங்களின் சிறப்புகளை மாதந்தோறும் முதல் வாரத்தில் சென்று அறிந்து கொள்வது வழக்கம். இதன்படி, மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதிக்கு சென்ற இந்த இயக்கத்தினர், அப்பகுதியின் வரலாற்றை அறிந்து கொண்டனர். இதற்கு எழுத்தாளர் சித்திரவீதிக்காரன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘விக்கிரமங்கலம் சிற்றூருக்கு முன்பாக உண்டாங்கல் மலையும் அதன் அருகே சின்ன உண்டாங்கல் மலை உள்ளது. இந்த இரண்டு மலைகளிலும் கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த 7 தமிழிக் கல்வெட்டுகளும், குகைத்தளத்தினுள் கற்படுகைகளும் உள்ளது.

இங்குள்ள கல்வெட்டுகள் 1923, 1926, 1978 ஆண்டுகளில் கண்டறியப்பட்டன. இந்த உண்டாங்கல் மலை அருகே குளம் ஒன்று உள்ளது. இங்கிருக்கும் கல்வெட்டுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர்நிலை அமைத்துத் தந்ததைச் சொல்வது கூடுதல் சிறப்பு. சமணர் படுகையில் உள்ள கல்வெட்டுகள் பாதி சிதலமடைந்துள்ளன. பாறையில் வரையப்பட்டிருந்த ஓவியங்களும் சேதமடைந்துள்ளது. தமிழின் தொன்மை பேசும் இது போன்ற வரலாற்று அடையாளங்களை சேதப்படுத்த வேண்டாம்’ என்றார். மேலும் இந்த நிகழ்வில் எழுத்தாளர் ரகுநாத், மருத்துவர் ராஜன்னா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வரலாற்று அடையாளங்களை சேதப்படுத்த வேண்டாம்: பசுமை நடை நிகழ்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: