இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மக்களை தேடி மருத்துவ முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

புழல்: புழல் காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில். மக்களை தேடி மருத்துவ முகாமினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். புழல் காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாம் வளாகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை, இருதயம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்களால், இலங்கை தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாத்திரை, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ‘‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி. ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழர்கள் 200 பேருக்கு பாஸ்போர்ட் போட்டு தரப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் வசிப்பவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அறிய மூன்று வகையிலான பிரிவுகளாக செயல்பட்டு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

முன்னதாக, முகாமில் உள்ளவர்கள் மிக்ஜாம் புயல் நிவாரண உதவியாக, ரூ.6 ஆயிரம் வழங்கிட வேண்டும் என அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்று முகாமில் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வெள்ள நிவாரணம் தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை செய்து நிதி நிலைமைக்கு ஏற்ப திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இம்முகாமில் மாதவரம் மண்டல ஆணையர் சங்கர், மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் இளஞ்செழியன், மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாதவரம் திமுக பகுதி செயலாளர் புழல் நாராயணன், வட்ட திமுக நிர்வாகிகள் குப்பன், சிவக்குமார், மெட்ரோ எழில் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், இலங்கை தமிழர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* கூடுதலாக 3500 வீடுகள்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 7000 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கூடுதலாக 3500 வீடுகள் கட்டப்பட உள்ளது என்றார்.

The post இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மக்களை தேடி மருத்துவ முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: