ஜல்லி, எம்சாண்ட் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை: கருங்கல் ஜல்லி, எம்சாண்ட் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய கட்டுமான சங்கம் மாநில தலைவர் எம்.அய்யப்பன், முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.திருசங்கு, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் சுதர்சன் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக அளித்த பேட்டி: கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையான கருங்கல் ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு ஏற்புடையதல்ல. ஆண்டுக்கு 3 முறை விலை ஏற்றியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விலை உயர்வினால் வீடு கட்டும் மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

விலை உயர்வால் அனைத்து சாலை பணிகளும், அரசு கட்டிட பணிகளும் நின்றுவிடும் நிலையில் உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பணிகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு வீடு கட்டும் மக்கள் மத்தியில் இந்த விலை உயர்வால் அரசு மீது மிகவும் அதிருப்தி அடைந்து உள்ளனர். எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சென்னையில் அனைத்து கட்டுமான சங்கத்தின் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதில் நல்ல முடிவை அரசு எடுக்கும் என நம்புகிறோம். எங்களுடைய கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் எல்லா வேலைகளையும் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ள வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post ஜல்லி, எம்சாண்ட் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: