பல்லவன் இல்லம் முன் போராட்டம்: போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பல்லவன் இல்லம் முன்பு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஆர்.துரை தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், பணியாளர் சம்மேளன தலைவர் நாகராஜ், அரசு ஊழியர் போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் தயானந்தம், பொருளாளர் பாலாஜி, துணை பொதுச்செயலாளர்கள் இளங்கோ, ராஜேந்திரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் வீரராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆறுமுக நயினார் அளித்த பேட்டி: போக்குவரத்து கழகத்தில் 21 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 1800 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டு ஓராண்டாகியும் நிரப்பவில்லை. அதிமுக ஆட்சியில் பேருந்துகளை குறைப்பது உள்ளிட்ட 8 அரசாணைகளை வெளியிட்டது. இதனால் 4 ஆயிரம் பேருந்துகள் குறைக்கப்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்களின் பணம் ரூ.13 ஆயிரம் கோடியை எடுத்து அரசு செலவிட்டுள்ளதை திரும்ப வழங்க வேண்டும்.

பிப்ரவரி 7ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஊதிய பேச்சுவார்த்தை குழு அமைத்து அரசாணை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஒன்றிய அரசு கணக்கின்படி சென்னை நகர மக்கள் தொகைக்கு 6 ஆயிரம் பேருந்துகளை இயக்க வேண்டும். ஆனால் 3,200 பேருந்துகள் தான் உள்ளன. பேருந்து தட்டுப்பாடு உள்ளதால் குறிப்பிட்ட காலம் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.

The post பல்லவன் இல்லம் முன் போராட்டம்: போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: