நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் அமைச்சர் பிரகலாத் ஜோஷி..!!

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ல் தாக்கல் செய்கிறார்.

பாஜக தலைமையிலான பிரதமர் நரேந்திர மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் இறுதி ஆண்டு நிதிநிலை அறிக்கை இதுவாகும். கடந்த வாரம், பட்ஜெட்டுக்கு முந்தைய பாரம்பரிய ‘ஹல்வா’ விழா நடைபெற்றது. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி, இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்:

பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாளை மறுநாள் ஒன்றிய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு:

பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் குளிர்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்துக்குள் நடந்த அத்துமீறலை அடுத்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் அமைச்சர் பிரகலாத் ஜோஷி..!! appeared first on Dinakaran.

Related Stories: