சட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய குழு: மக்களவை சபாநாயகர் தகவல்

மும்பை: மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தலைவர் ராகுல் நர்வேகர் தலைமையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

மும்பையில் நடந்த அகில இந்திய தலைமை அதிகாரிகள் மாநாட்டின் நிறைவு விழாவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், ‘அரசியல் சாசனத்தின் பத்தாவது அட்டவணையில் வகுக்கப்பட்டுள்ள கட்சித் தாவல் தடைச் சட்டம், சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி கட்சிகள் மாறுவதைத் தடுக்க இயற்றப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தானாக முன்வந்து கட்சி மாறினால் அல்லது கட்சியின் கொள்கைக்கு எதிராக வாக்களித்தால் அவர்களை சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். இருப்பினும், ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு மற்றொரு கட்சியுடன் இணைக்க ஒப்புக்கொண்டால், அவர்கள் தகுதி நீக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மறுஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். சமீபத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவினர் தாக்கல் செய்த எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை ரத்து செய்து, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய குழு: மக்களவை சபாநாயகர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: