சென்னை: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் இன்று சென்னை வருகை தரும் நிலையில், கூட்டணியில் எத்தனை சீட் கேட்பது மற்றும் உட்கட்சி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகவும் மாநில நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழக காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த முறை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல் ஆளாக தமிழக மேலிட காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை நியமித்தது.
இந்த குழு முதல்வரை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. தேர்தல் நெருங்கும் இந்த சூழ்நிலையில், தமிழக காங்கிரசில் சிலர் கோஷ்டி பிரச்னையை தூண்டி விட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கட்சி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை முன்வைத்து சிலர் கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் வெளிப்படையாக பேசத் தொடங்கி இருப்பது காங்கிரசில் புயலை கிளப்பி வருகிறது. அதிக சீட் கேட்பதற்காக இவ்வாறு பேசுகிறார்கள் என்று மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினாலும் குழப்பம் என்று வந்துவிட்டால் பெரிய பாதிப்பை தான் ஏற்படுத்தும் என்றும் மூத்த தலைவர்கள் அவர்களை எச்சரித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். அப்போது அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அப்போது தமிழக காங்கிரசில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி முடிவுகளை எடுப்பார் என்று காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்று காலை சென்னை வரும் கிரிஷ் சோடங்கர், சத்தியமூர்த்தி பவனில் பகல் 11.30 மணிக்கு நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
அதை தொடர்ந்து 2.30 மணிக்கு சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள், வார் ரூம் நிர்வாகிகள், சமூக ஊடகத் துறை நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். அவர்களிடம் தேர்தல் தொடர்பாக கருத்துகளை கேட்கிறார். அதன் பின்பு தன்னை சந்தித்து பேச விரும்பும் முக்கிய நிர்வாகிளுடன் தனித்தனியாக விவாதிக்கவும் திட்டமிட்டுள்ளார். அப்போது, தேர்தல் தொடர்பாக கட்சியினரின் விருப்பங்களை கேட்க உள்ளதாகவும், கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை சீட் கேட்கலாம் என்பது குறித்தும், உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து, அடுத்த நாள் காலை சத்தியமூர்த்திபவனில் நடைபெறும் காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின்பு மூத்த தலைவர்களிடம் தனித்தனியாக பேசுகிறார். இவ்வாறாக பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கும் அவர் தற்போது தமிழக காங்கிரசில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி முடிகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கிரிஷ் சோடங்கர் வருகை தமிழக காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
