தஞ்சை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,300 காளைகள் ஆவேச பாய்ச்சல்: 625 வீரர்கள் மல்லுக்கட்டு

தஞ்சை: தஞ்சை திருக்கானூர்பட்டி, திருச்சி கருங்குளத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 1,300 காளைகள் சீறி பாய்ந்தன. காளைகளை 625 வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். தஞ்சை அடுத்த திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டன. 350 வீரர்கள் களமிறங்கினர்.

காலை 6.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். களத்தில் பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக நின்று விளையாடியது. காயமடைந்த வீரர்களுக்கு களத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், வாஷிங் மிஷின், பிரிட்ஜ், கட்டில், மிக்சி, எவர்சில்வர் பாத்திரம், ரொக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் வல்லம் டிஎஸ்பி நித்யா மற்றும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமானோர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

அதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடந்தது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் கொண்டு வரப்பட்டன. 275 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டை ரங்கம் ஆர்டிஓ தட்சணாமூர்த்தி துவக்கி வைத்தார். இங்கு ரொக்க பணம், வெள்ளி காசு, கட்டில், மின் விசிறி, குக்கர், சேர், எவர்சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் 280 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post தஞ்சை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,300 காளைகள் ஆவேச பாய்ச்சல்: 625 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Related Stories: