ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் கவர்னர் உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்த ஆரிப் முகமது கான்: கேரள சட்டப்பேரவையில் இருந்து ஒரு நிமிடத்தில் வெளியேறினார்

திருவனந்தபுரம்: ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் கேரள சட்டப்பேரவையில், உரையில் இருந்த கடைசி பத்தியை மட்டும் வாசித்துவிட்டு ஒரு நிமிடத்தில் சபையிலிருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் துணை வேந்தர்கள் நியமனம், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் பனிப்போர் நிலவி வருகிறது. கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு எஸ்எப்ஐ அமைப்பினர் கருப்புக் கொடி காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு கூட்டத் தொடர் தொடங்கும்போதும் சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரையை மாநில அரசுதான் தயாரித்து கவர்னருக்கு அனுப்பி வைக்கும். சட்டசபையில் வைத்து உரை முழுவதையும் கவர்னர் வாசிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் சட்டசபைக்கு வந்தார். அப்போது சபை வாயிலில் அவரை முதல்வர் பினராயி விஜயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதன்பின் சட்டசபைக்குள் நுழைந்த அவர், உரையை வாசிக்கத் தொடங்கினார். ஆனால் 63 பக்கங்களைக் கொண்ட அந்த உரையின் கடைசி பத்தியை மட்டுமே வாசித்த கவர்னர் ஆரிப் முகம்மது கான், ஒரு நிமிடத்திலேயே சபையிலிருந்து வெளியேறினார். செல்லும்போது சபையில் இருந்த உறுப்பினர்கள் யாருக்கும் வணக்கம் கூட செலுத்தாமல் அவர் வெளியேறினார். சபைக்கு வெளியே இருந்த பத்திரிகை நிருபர்களிடம் கூட அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துகள் இருந்தது தான் உரை முழுவதையும் வாசிக்க கவர்னர் மறுத்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. கூட்டாட்சிக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. உரிய நிதியை மாநிலத்துக்கு வழங்காததால் மாநிலத்தில் ஒன்றிய அரசே நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உச்சநீதிமன்றத்தை மாநில அரசு அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டாட்சிக்கு ஏற்ப ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்று கவர்னர் உரையில் இடம் பெற்றிருந்தது.

 

The post ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் கவர்னர் உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்த ஆரிப் முகமது கான்: கேரள சட்டப்பேரவையில் இருந்து ஒரு நிமிடத்தில் வெளியேறினார் appeared first on Dinakaran.

Related Stories: