மாமல்லபுரம் இசிஆர் சாலையை ஆக்கிரமித்து சிமெண்ட் விற்பனை நடத்தி வந்த கண்டெய்னர் பெட்டி அகற்றம்: வருவாய்த்துறையினர் அதிரடி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையை ஆக்கிரமித்து சிமெண்ட் விற்பனை நடத்தி வந்த கண்டெய்னர் பெட்டியை வருவாய்த்துறையினர் அதிரடியாக அகற்றினர். சென்னை – புதுச்சேரி இசிஆர் சாலையில், எப்போதுமே வாகனங்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இச்சாலையை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வந்தநிலையில், 4 வழிச்சாலை பணிக்காக சிற்ப கல்லூரி முதல் புதுச்சேரி வரை ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் எடுத்துக்கொண்டது.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த ஒருவர் இசிஆர் சாலையை ஆக்கிரமித்து கண்டெய்னர் மூலம் சிமென்ட் மூட்டை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக, பூஞ்சேரி பகுதி மக்கள் ஆக்கிரமிப்பு கடைகளால் இசிஆர் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த கண்டெய்னரை அகற்ற வேண்டும் என செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மாவுக்கு தொடர்ந்து புகார் மனு அளித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சார் ஆட்சியர் நாராயண சர்மா நேரில் வந்து ஆய்வு செய்து, உடனடியாக கண்டெய்னரை அகற்ற வேண்டும் என திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரி மேற்பார்வையில், திருக்கழுக்குன்றம் மண்டல துணை தாசில்தார் சையது அலி முன்னிலையில், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ரகு, விஏஓக்கள் வடிவேல், முனுசாமி, நரேஷ்குமார், தினேஷ் மற்றும் வருவாய் துறையினர் நேற்று நேரில் சென்று, கண்டெய்னரை கிரேன் மூலம் அகற்றி, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம் எடுத்துச் சென்று, தலைமையிடத்து துணை தாசில்தார் கணேசன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பு கண்டெய்னர் உரிமையாளரை தலைமையிடத்து துணை தாசில்தார் கணேசன் கடுமையாக எச்சரித்தார். முன்னதாக, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) மங்கள பிரியா மேற்பார்வையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மாமல்லபுரம் இசிஆர் சாலையை ஆக்கிரமித்து சிமெண்ட் விற்பனை நடத்தி வந்த கண்டெய்னர் பெட்டி அகற்றம்: வருவாய்த்துறையினர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: