திருப்போரூரில் ஓம்சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருப்போரூர்: திருப்போரூர் ஓம்சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் பேருந்து நிலையத்தில் ஓம்சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிவடைந்தநிலையில், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றன. முதற்கட்ட நிகழ்ச்சியாக கடந்த 19ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர், கோயிலில் வைக்கப்பட உள்ள சுவாமி சிலைகள் மற்றும் விமான கலசம் அபிஷேகம் செய்யப்பட்டு கிரிவலப்பாதை மற்றும் நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு கணபதி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, சிறப்பு அர்ச்சனைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் ஓத விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது அப்போது, விமானத்தின் மீதிருந்து கீழே நின்றிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர்.

The post திருப்போரூரில் ஓம்சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: