அயோத்தியில் குழந்தை ராமரை தரிசிக்க லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்: கூட்டத்தை சமாளிக்க முடியாமல் உபி அரசு திணறல்

அயோத்தி: அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து குவிவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் உத்தரப்பிரதேச மாநில அரசு திணறுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டப்பட்டு, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் அனுமதிக்கப்பட்ட முதல் நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் வரை பால ராமரை தரிசித்தனர். இந்நிலையில், நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்தனர். பிற்பகல் வரையிலும் 3 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அயோத்தி கோயிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் உபி அரசு திணறிக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினமே பக்தர்கள் அலைமோதத் தொடங்கியதைத் தொடர்ந்து, வான் வழியாக ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கூட்டத்தை நிர்வகிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார். லக்னோவில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய ஆதித்யநாத், அயோத்தி கோயிலுக்கு வரும் விஜபிக்கள் ஒருவாரத்திற்கு முன்பாக மாநில அரசு அல்லது ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் பிரசாத் கூறுகையில், ‘‘ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் சீராக நடந்து வருகிறது. பொது வசதி மையம், பக்தர்கள் வெளியேறும் பாதையை அமைத்துள்ளோம். அயோத்திக்கு வரும் சாலைகளில் வாகனங்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அதிகப்படியான பக்தர்கள் வருவதை தடுக்க சுல்தான்பூர் மற்றும் லக்னோவில் இருந்து அயோத்தி செல்லும் பஸ் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

ராமரை தரிசிக்க வந்த அனுமன்
ராமர் கோயில் பொது தரிசனத்திற்கு நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நிலையில், குரங்கு ஒன்று கருவறைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தனது டிவிட்டர் பதிவில், ‘ராமர் கோயிலில் அழகான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5.50 மணி அளவில் தெற்கு வாசல் வழியாக குரங்கு ஒன்று நுழைந்து கருவறையில் உற்சவ மூர்த்தி அருகே சென்றது. அந்த குரங்கு, சிலையை கீழே தள்ளிவிடும் என நினைத்த அங்கிருந்து பாதுகாப்பு காவலர் வேகமாக சென்றார். இதை கவனித்த குரங்கு மெதுவாக வடக்கு கதவை நோக்கி ஓடியது. கதவு மூடப்பட்டவுடன் கிழக்கு நோக்கி சென்று பக்தர்களுக்கு இடையூறு இன்றி அமைதியாக சென்றது. இதுபற்றி காவலர், குழந்தை ராமரை காண அனுமனே வந்திருக்கிறார் என்றார்’ என கூறி உள்ளது.

The post அயோத்தியில் குழந்தை ராமரை தரிசிக்க லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்: கூட்டத்தை சமாளிக்க முடியாமல் உபி அரசு திணறல் appeared first on Dinakaran.

Related Stories: