பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்

பழநி : பழநி மலைக்கோயில் தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த ஜன. 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் வள்ளி – தெய்வானை சமேதர முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்றிரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடக்க உள்ளது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜன. 28ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். அன்றிரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது.

பாதயாத்திரையாக பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தைப்பூச திருவிழாவிற்கு அதிக அளவிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்கான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகங்களின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் ஜன. 28ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

The post பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Related Stories: