ஏபிஆர் நிறுவனத்தின் மளிகை, நகைக்கடைக்கு `சீல்’ பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி செய்யாறில் தீபாவளி சிட்பண்ட் நடத்தி மோசடி செய்த

செய்யாறு, ஜன.24: செய்யாறு நகரில் தீபாவளி சிட்பண்ட் நடத்தி மோசடி செய்த ஏபிஆர் நிறுவனத்திற்கு சொந்தமான மளிகைக்கடை, நகைக்கடைக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று சீல் வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் தீபாவளி சிட்பண்ட் நடத்தியது பிரபல ஏபிஆர் நிறுவனம். இந்நிறுவனம் தொடங்கிய சில ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் தனது கிளைகளை தொடங்கியது. தீபாவளிக்கு முன்பு பண்ட் சீட்டு கட்டியவர்களுக்கு முறையாக முதிர்ச்சி பணம், பட்டாசு, இனிப்பு, ₹100 முதல் ₹5 ஆயிரம் வரையில் கட்டினால் கவர்ச்சிகரமான பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது.

அதேபோல், அதிக நபர்களை பிடித்து கொடுக்கும் ஏஜெண்டுகளுக்கு ஏசி, இருசக்கர வாகனம், கார், பிளாட் அன்பளிப்பாக வழங்கப்படும் என பல திட்டங்களை அறிவித்து செயல்பட்டு வந்தது. ஆனால், முறையாக பொருட்கள் தராமல் மோசடி செய்ததாக வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஏபிஆர் நிறுவனர் அல்தாப்தாஷிப்ைப போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு சொந்தமான மளிகைக்கடை புதிய காஞ்சிபுரம் சாலையில் அமைந்துள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதம் அதிகாலை யாரும் இல்லாத நிலையில் கடையின் பூட்டை உடைத்து பொதுமக்கள் சூறையாடி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். பின்னர், தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கடையை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், செய்யாறு நகரில் ஏபிஆர் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கனகேசன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை செய்தனர். பின்னர், நகைக்கடை மற்றும் மளிகைக்கடைக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதேபோல், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அரக்கோணம் உள்ளிட்ட 25 இடங்களில் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கனகேசன் தலைமையிலான 8 குழுவினர் வீடுகள், மளிகைக்கடை, நகைக்கடை, குடோன்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அதிரடி சோதனை செய்தனர். தொடர்ந்து, ஏபிஆர் தீபாவளி சிட்பண்ட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என, பஸ் நிலையம் முன்பு டிஎஸ்பி கனகேசன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.

The post ஏபிஆர் நிறுவனத்தின் மளிகை, நகைக்கடைக்கு `சீல்’ பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி செய்யாறில் தீபாவளி சிட்பண்ட் நடத்தி மோசடி செய்த appeared first on Dinakaran.

Related Stories: