கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தமிழ்நாடு பதக்க வேட்டை: ஸ்குவாஷில் ஆர்த்தி அசத்தல்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்க வேட்டை நடத்தி வருகிறது. மகளிர் ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி தங்கம் வென்றார். சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் நடந்து வரும் இந்த தொடரில், தொடக்கத்தில் இருந்தே பதக்கங்களைக் குவித்து வரும் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. சேத்துப்பட்டு ஸ்குவாஷ் அகடமியில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் மகாராஷ்டிராவின் நிருபமா துபேவுடன் மோதிய பூஜா ஆர்த்தி 3-2 என்ற செட்களில் வென்று தமிழ்நாட்டுக்காக 7வது தங்கத்தை வென்றார். ஸ்குவாஷ் போட்டி இந்த ஆண்டுதான் முதல்முறையாக கேலோ இந்தியா போட்டியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2வது இடம் பிடித்த நிருபமா வெள்ளிப் பதக்கம் பெற்ற நிலையில், தமிழக வீராங்கனைகள் ஷமினா ரியாஸ், தீபிகா வெண்கலம் வென்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர்கள் அரிஹந்த், சந்தோஷ் வெண்கலப்பதக்கங்களை வசப்படுத்தினர். தமிழ்நாட்டுக்கு நேற்று ஒரே நாளில் ஸ்குவாஷ் போட்டியில் மட்டும் 5 பதக்கங்கள் கிடைத்தன. குழு பிரிவில் தமிழ்நாடு ஆண்கள், பெண்கள் அணிகள் பைனலுக்கு முன்னேறி உள்ளன. ஸ்குவாஷ் பைனல்ஸ் இன்று நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக தங்கம் உட்பட மேலும் 4 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.

சைக்கிள் பந்தயத்தில் அமர்க்களம்: மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை. வளாகத்தில் நேற்று பெண்கள் 7.5 கி.மீ சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற கோவை வீராங்கனை ஆர்.தமிழரசி முதலிடம் பிடித்து (10 நிமிடம், 10.625 விநாடி) தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். மற்றொரு தமிழ்நாடு வீராங்கனை ஜே.பி.தன்யதா (கோவை) 10 நிமிடம், 10.758 விநாடிகளில் பந்தய தொலைவை கடந்து வெண்கலம் வென்றார். தன்யதா 2 கி.மீ சாய்தள சைக்கிள் பந்தயத்தில் தங்கம் வென்றதுடன் ஒரே நாளில் 2வது பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். 2 கி.மீ தனிநபர் சைக்கிள் பந்தயத்தில் தமிழ்நாட்டின் ஜே.ஸ்ரீமதி வெள்ளி வென்றார்.

வெண்கலம் வென்ற உடன்பிறப்புகள்: துப்பாக்கிசுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டின் வைஷ்ணவி கிரீஷ்ராமதாஸ், விராஜ் கிரீஷ்ராமதாஸ் இணை வெண்கலம் வென்றது. இந்தப்பிரிவில் அரியானா, ராஜஸ்தான் ஜோடிகள் முறையே தங்கம், வெள்ளி பதக்கங்களை கைப்பற்றின. யோகாவில் மீண்டும் பதக்கம்: எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்று வரும் யோகா போட்டிகளில் நேற்று கலைநய பெண்கள் இரட்டையர் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனைகள் பெட்ரா சிவானி, மேனகா குழு தங்கப் பதக்கத்தை வென்றது. வெள்ளியை மகராஷ்டிரா அணியும், வெண்கலத்தை மத்தியபிரதேச அணியும் கைப்பற்றின. வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை தலைவர் சீமா அகர்வால் பதக்கங்களை அணிவித்தார்.

பதக்க பட்டியல் டாப் 10
ரேங்க் அணி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 மகாராஷ்டிரா 14 15 16 45
2 தமிழ்நாடு 12 3 16 31
3 அரியானா 7 6 19 32
4 டெல்லி 7 6 6 19
5 பஞ்சாப் 6 5 7 18
6 குஜராத் 5 2 2 9
7 மணிப்பூர் 4 4 7 15
8 மேற்கு வங்கம் 4 4 3 11
9 உத்தரபிரதேசம் 3 3 3 10
10 தெலங்கானா 3 0 3 6

The post கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தமிழ்நாடு பதக்க வேட்டை: ஸ்குவாஷில் ஆர்த்தி அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: